search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொருட்களுக்கு தடை"

    தமிழக அரசு அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்த உள்ள பிளாஸ்டிக் தடை சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என விருதுநகர் தொழில்துறை சங்கம் கோரி உள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் வியாபார தொழில்துறை சங்க தலைவர் வி.வி.எஸ்.யோகன், முதல்- அமைச்சருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் ஆணை எண் 84-ன்படி குறு மற்றும் சிறு நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பிளாஸ்டிக் பொருட் கள் அடுத்த ஆண்டு முதல் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை இல்லை. இதனால் குறு, சிறு நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை.

    இந்தநிலையில் அந்த மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பிளாஸ்டிக் பொருட்கள் வருவதை தடுக்க வாய்ப்பு இருக்காது. பிற மாநிலங்களில் தடை இல்லாமல் தமிழகத்தில் மட்டும் தடை செய்வதால் நம்முடைய உற்பத்தி மற்றும் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். அதிலும் பிளாஸ்டிக் உற்பத்தியை வாழ்வாதாரமாக கொண்டுள்ள சிறு நிறுவனங்களும் அவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்படுவர். தமிழகத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்தெடுக்கும் முறையை முழுமையாக செயல்படுத்திட வேண்டும். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கனவு திட்டமான பிளாஸ்டிக் தார்சாலை இதுவரை அமைக்கப்படவில்லை. இவைகளை நிறைவேற்றுவதால் கழிவு பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை அதிகரித்து மாசு ஏற்படுவதை தடுக்க முடியும்.

    எனவே பொதுமக்கள் நலனிலும், குறு,சிறு நிறுவனங்களின் வளர்ச்சியிலும் அக்கறை உள்ள தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கு அமல்படுத்த உள்ள தடையை உடனடியாக செயல்படுத்தாமல் நிறுத்தி வைத்து அதற்கு நல்ல தீர்வு காண வேண்டுகிறோம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    நீலகிரியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் துணிப்பை பயன்பாட்டுக்கு வியாபாரிகள் மாறி இருக்கின்றனர்.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ‘உன்னத உதகை‘ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன்படி அனைத்து விதமான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது. நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி அமைப்புகள் மூலமாகவும், தன்னார்வ தொண்டு அமைப்புகள் மூலமாகவும் பொதுமக்கள், வணிகர்கள், வியாபாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இது தவிர மாவட்டத்தில் உள்ள கடைகளில் அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துபவர்கள் மற்றும் விற்பனை செய்வோருக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    மேலும் மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் முன்னாள் ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்பட்டு சுற்றுலா வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. அதில் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டால், பறிமுதல் செய்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும் அதற்கான ரசீது வினியோகிக்கப்பட்டு, பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    இந்த நிலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால், நீலகிரி மாவட்ட வியாபாரிகள் துணிப்பை பயன்பாட்டுக்கு மாறி இருக்கின்றனர். தங்கள் கடைகளில் வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களை துணிப்பையில் போட்டு கொடுத்து வருகின்றனர். மேலும் இறைச்சி கடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக வாழை இலைகள் பயன்படுத்தப்படுகின்றன. துரித உணவகங்களில் பாக்கு மட்டையால் ஆன தட்டுகள், தேநீர் விற்பனை நிலையங்களில் சில்வர் டம்ளர்களை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கடைகளில் எளிதில் மக்கக்கூடிய பிளாஸ்டிக் பைகளில் உணவு பொருட்கள் பேக்கிங் செய்து தரப்படுகின்றன. மேலும் பேக்கிங் செய்வதற்கு செய்தித்தாள்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தவிர கடைகளுக்கு பொருட்களை வாங்க வரும் வாடிக்கையாளர்களும் துணிப்பைகளை கொண்டு வருவதால், பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்து வருகிறது. இதனால் பிளாஸ்டிக் ஒழிப்புக்கான மாவட்ட நிர்வாகம் எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்க தொடங்கி உள்ளது.

    மேலும் தமிழக அரசும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து விதமான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 
    ×